திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்திருந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இளைஞர், சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று மாந்தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, குற்றவாளியை கைது செய்ய 20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
குற்றவாளியை கண்டுபிடிக்க அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் பொது இடங்களில் போஸ்டராக ஓட்டினர். குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரெயில்நிலையம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்பட பிற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.
கஞ்சா போதைக்கு அடிமையான அந்த இளைஞர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்து உள்ளார். வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை - 12ம் தேதி) அந்த இளைஞர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது.
கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படத்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் நேற்று மாலை சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவியத்தொடங்கினர்.
இந்நிலையில், சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நேரில் விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட இளைஞரை சம்பவம் நடைபெற்ற மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்த உள்ளனர். மேலும், வடமாநில இளைஞரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது. முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும். இளைஞரை சிறையிலடைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 30 வயது இருக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. முக்கியமான வழக்கு என்பதால் முறையான விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு முழு விவரங்கள் அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி மகளிர் காவல்நிலையத்தில் ஏற்கெனவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில் BNS 118, 351, 97 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். கவரப்பேட்டை காவல் நிலையத்தில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் இளைஞரிடம் போலீசார் 2ஆம் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்படி கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, கவரப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு இன்று பிற்பகலில் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் இளைஞர் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி ஐஜி, டிஎஸ்பி, காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.