கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய மின்பரிமாற்ற அமைப்பு-பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.4,900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை திறந்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி வாகைகுளத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று இரவில் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
ரெயில்வே துறை சார்பில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி பாதையை இரட்டிப்பாக்குதல், ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நெல்லை- மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்குதல், மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையை மின்மயமாக்குதல் ஆகிய ரூ.1,032 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதுதவிர தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலைய அலகு 3, 4-ல் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான ரூ.548 கோடி செலவில் 2 ஜிகாவாட் சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி மின்பரிமாற்ற அமைப்புக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நேற்று ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.4,900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை திறந்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.