தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-07-27 10:41 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நாய்க்கடி சம்பவங்கள், ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள், சாலை விபத்துகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பரவலாக உள்ள இப்பிரச்சினை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது.

ரேபிஸ் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும். தெரு நாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும், தடுப்பூசி இல்லாத நிலையும் இதனை மேலும் தீவிரப்படுத்துகின்றன. தெரு நாய்கள் சாலைகளில் திடீரென புகுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடமாடும் முதியவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயத்தை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்றும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத் துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்