சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று - பிரதமர் மோடி பேச்சு
"தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும்" என்று பிரதமர் மோடி அறிவித்தார்.;
தஞ்சை,
கங்கை கொண்ட சோழப்புரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார். அப்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கேட்ட பிரதமர் மோடி, சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது;
வணக்கம் சோழ மண்டலம். சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. பாரத நாட்டின் வளர்ச்சிக்காக என் வேண்டுதலை சிவனிடம் வைத்தேன். 1000 ஆண்டுகள் நிறைவுசெய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை கண்டு வியந்தேன்.
சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.
பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது. நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கை கொண்ட சோழபுரம். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம்.
பாரதத்தின் வலிமையை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது. நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழர் சாம்ராஜ்ஜியம். தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்