காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கைதான சுர்ஜித் | கொலையுண்ட கவின்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகரில் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மூத்த மகன் கவின் (வயது 27). சென்னை துரைப்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். கவின் நேற்று முன்தினம் பகலில் தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு சித்தா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், கவினை பேசுவதற்காக அழைத்துச்சென்றார். சிறிது நேரத்தில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சுர்ஜித் (24) என்பது தெரியவந்தது. இவருடைய தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாய் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, சுர்ஜித்தின் அக்காளும், கவினும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். இதனால் அவர்கள் அடிக்கடி பேசி பழகி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே சுர்ஜித்தை கைது செய்தனர்.
அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "என்னுடைய அக்காளும், கவினும் பழகுவதை நானும், என்னுடைய பெற்றோரும் விரும்பவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவினிடம் பலமுறை தொடர்பு கொண்டு என்னுடைய அக்காளுடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.
அக்கா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு கவின் வந்திருப்பதை தெரிந்து, அங்கு சென்றேன். அங்கிருந்த கவினிடம் பேசவேண்டும் என்று அழைத்து சென்றேன். அவரிடம் எனது அக்காளுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறினேன். ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டிக் கொன்றேன்" என்று கூறிஉள்ளார்.
இதற்கிடையே கவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவரது வீட்டின் முன் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து வேன்களில் புறப்பட்டு ஆத்தூர் அருகே முக்காணி ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். அங்கு திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திபு, சகாயஜோஸ், துணை சூப்பிரண்டுகள் மகேஷ்குமார், நிரேஷ், பாளையங்கோட்டை விசாரணை அதிகாரி சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன், ஏரல் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
முதலில் போலீசார், அணிவகுத்து நின்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். அதாவது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் குரும்பூர், ஏரல், சாயர்புரம் வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கும் மேற்கண்ட வழியாகவே வாகனங்கள் இயக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கவின் கொலை தொடர்பாக போலீஸ் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் 2 பேரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்கமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னா் உடன்பாடு ஏற்பட்டது. அதாவது, 24 மணி நேரத்தில் போலீஸ் தம்பதியை கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு
கொலையான கவினின் தாயார் தமிழ்செல்வி பாளையங்கோட்டை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் 'சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் கொலை செய்ய தூண்டியதாலேயே அவர்களது மகன் சுர்ஜித் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த புகாரின் பேரில் சரவணன், கிருஷ்ணகுமாரி, சுர்ஜித் ஆகிய 3 பேர் மீது கொலை, வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கவினும், சுர்ஜித்தின் அக்காவும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.