திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.;
சென்னை,
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளியில் நான்கு பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. அதில் ஒரு மனநலம் குன்றிய சிறுமியும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
கடந்த நான்காண்டுகால திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுகின்றன. அனைத்திற்கும் பின்னணியில் போதைப் பொருட்கள் பதுங்கிக் கிடக்கின்றன. வெளியே செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா என்ற பதற்றத்திலும், வீட்டில் உள்ள பெண்கள் மீது எப்போது யார் கை வைப்பார்கள் என்ற பயத்திலும் தமிழக மக்கள் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி ஒரு அலங்கோல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். "ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம்" என்பதன் அர்த்தம் இதுதானா?
பெண்களைத் தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சிக்கும் சில ஆபாசப் பேச்சாளர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாகக் கொண்டாடும் திமுகவின் ஆட்சியில், பெண்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கினால் மட்டுமே தமிழகப் பெண்கள் நிம்மதியாக சுவாசிக்க முடியும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். எனவே ஆளும் அராஜக அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்!"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.