ஏழை கைதிகளுக்கான ஆதரவு திட்டம்: தமிழக சிறைவாசிகள் யாரும் பயன்பெறவில்லை - உள்துறை அமைச்சகம்
இந்த திட்டத்தின் மூலம் சிறைகளில் கைதிகள் நிரம்புவதை தடுக்கமுடியும் என்று மத்திய அரசு கருதியது.;
சென்னை,
நிதி நெருக்கடி காரணமாக அபராதம் செலுத்த முடியாமலும், ஜாமீன் பெற முடியாமலும் சிறையில் வாடும் ஏழை கைதிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த 2023-ம் ஆண்டு ஏழை கைதிகளுக்கான ஆதரவு திட்டத்தை அமல்படுத்தியது.
இதன்படி, ஜாமீன் பெறுவதற்கு ரூ.40 ஆயிரம் வரையிலும், அபராதம் செலுத்த ரூ.25 ஆயிரம் வரையிலும் சிறைவாசிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சிறைகளில் கைதிகள் நிரம்புவதை தடுக்கமுடியும் என்று மத்திய அரசு கருதியது.
ஏழை கைதிகளுக்கான ஆதரவு திட்டத்தின்படி நாடு முழுவதும் கடந்த 2023-24-ம் ஆண்டு 17 கைதிகளும், 2024-25-ம் ஆண்டில் 93 கைதிகளும், 2025-26-ம் ஆண்டில் (இந்த மாதம் வரை) 34 கைதிகளும் பயன்பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 56 கைதிகள் பயன் அடைந்திருக்கிறார்கள்.
இதற்கு அடுத்தப்படியாக மத்தியப்பிரதேசத்தில் இருந்து 35 பேரும், உத்தரகாண்டில் இருந்து 21 பேரும் உதவி பெற்று இருக்கிறார்கள். தமிழகம், புதுச்சேரி உள்பட 24 மாநிலங்களில் இருந்து எந்த கைதிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.