பஞ்சாயத்துகளில் கடைகள், தொழில் தொடங்க உரிமம் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு ஏற்புடையதல்ல - ஜி.கே.வாசன்
புதிய விதிகளை உருவாக்கி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் டீ கடை வைத்து செய்யும் தொழில் உள்ளிட்ட அனைத்து விதமான சிறு குறு நடுத்தர தொழில்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது தமிழக அரசு கிராமப் பஞ்சாயத்துகளில் கடைகள், தொழில் தொடங்க உரிமம் பெறுவது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்புடையதல்ல.
அதாவது கிராமங்களில் 48 வகையான உற்பத்தி மற்றும் 119 வகையான சேவைத்தொழில் செய்வதற்கு உரிமம் பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் வரி விதிப்பு, கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசு ஊரக உள்ளாட்சிகளின் எல்லைகளுக்கு உட்பட்ட கடைகளுக்கு தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக டீக்கடை, சிற்றுண்டி கடைகளுக்கு கிராம பஞ்சாயத்துகளில் ரூ. 500 முதல் ரூ. 7,000 வரையிலும், நகர்ப்புற கிராம பஞ்சாயத்துகளில் டீக்கடை, சிற்றுண்டி கடைகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 10, 000 வரையிலும், கசாப்பு கடைகளுக்கு நகர்ப்புற கிராம பஞ்சாயத்துகளில் ரூ. 3,000 முதல் ரூ. 30,000 வரையிலும், நகர்ப்புற கிராம பஞ்சாயத்துகளில் திருமண மண்டபங்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 30,000 வரையிலும், தனியார் வாகன நிறுத்தங்களுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 18 ஆயிரம் வரையிலும் என்று உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், டீக்கடைகள், உணவகங்கள் தங்கும் இடங்கள் திருமண மண்டபங்கள் சிறு அரங்குகள் மற்றும் இறைச்சி கூடங்கள் என வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற டீக்கடை தொடங்கி சிறிய அளவிலான கடைகளுக்கு உரிமக் கட்டணம் என்ற உத்தரவால் தங்களின் வசதிக்கேற்ப சிறிய கடை முதல் சிறிய வகையிலான தொழில் நடத்த முன்வருபவர்கள் யோசிக்கிறார்கள்.
மேலும் டீக்கடை, சிறிய வகையிலான தொழில் உள்ளிட்ட அன்றாட வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களும் சிரமப்படுவார்கள். தமிழக மக்கள் மீது ஏதேனும் ஒரு வகையில் பொருளாதார சுமையை ஏற்றி வருவாயைப் பெருக்க நினைக்கும் தமிழக அரசு மக்கள் நலன் காக்க தவறுகிறது. தமிழக அரசு வருவாயைப்பெருக்க நினைத்தால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், புதிதாக சிறிய வகையிலான தொழில் தொடங்க முன்வருபவர்களையும், கிராமப்புற மக்களையும் பாதிக்காத வகையில் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
எனவே தமிழக அரசு தற்போது கடைகளுக்கு தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்கி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.