பேரனை விசாரணைக்கு அழைத்து சென்றதை தடுத்ததால் ஆத்திரம்: போலீசார் தாக்கியதில் மூதாட்டி பலி
வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 போலீசாரும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர்.;
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது 80, இவரது பேரனை ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்வதற்கு 4 போலீசார் அதிகாலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை போலீசார் இழுத்து வரும்போது, சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள், எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்டபோது, வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 போலீசாரும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர் மூதாட்டி சூசைமரியாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மூதாட்டியை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த 4 போலீசாரையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.