மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22 ஆயிரத்து 114 ஏக்கர் நிலங்களும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 20 ஆயிரத்து 622 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்டு 1-ந்தேதி (நாளை) முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31-ந்தேதி (இன்று) முதல் ஆகஸ்டு 14-ந்தேதி முடிய நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் 15 நாட்கள் சிறப்பு நனைப்பிற்கு 2 ஆயிரத்து 980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆகஸ்டு 18-ந்தேதி முதல் டிசம்பர் 12-ந்தேதி முடிய 120 நாட்களுக்கு, முதல்போக நன்செய் பாசனத்திற்கு 23 ஆயிரத்து 846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், மொத்தம் 135 நாட்களுக்கு 26 ஆயிரத்து 827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது. .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.