தமிழ்நாட்டில் ரூ.124.21 கோடியில் 2 மீன்பிடித்துறைமுகங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில் ரூ.124.21 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், மீன்வளத் துறை, 2020-21 நிதியாண்டு முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ரூ.20 ஆயிரத்து 50 கோடி முதலீட்டில் பிரதமரின் மீன்வளத் திட்டத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தி மீன்வளத்துறையின் நிலையான, பொறுப்பான வளர்ச்சி மற்றும் மீனவர்களின் நலன் மூலம் நீலப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் கூறியதாவது:-
பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் 26 மீன்பிடி துறைமுகங்கள், 22 மீன் இறங்கும் மையங்கள் மற்றும் 21 மொத்த விற்பனை மீன் சந்தைகளை மேம்படுத்துதல், நவீனமாக்குதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் ரூ.124.21 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் பங்கு ரூ.113.71 கோடி இதில் ரூ.55.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.26.42 கோடி செலவில் 4 மீன் இறங்கும் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுச்சேரியில் ரூ.173.33 கோடி செலவில் 2 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-2024 நிதியாண்டில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.60 ஆயிரத்து 523.89 கோடி மதிப்புள்ள 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.