முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்த ராமதாஸ்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசினர்.;

Update:2025-08-01 20:19 IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 21-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார்.

பின்னர் உடல் நலம் தேறிய நிலையில் கடந்த 27-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். 10 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளை தொடங்கினார்.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசினர். நேற்று காலை அடையாறு பகுதியில் நடைபயிற்சி சென்றபோது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், நேற்று மாலையில் மீண்டும் முதல்-அமைச்சரின் இல்லத்திற்கு சென்று பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் ராமதாசும், மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ராமதாசிடம் கேட்டதற்கு, முதல்-அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்