தந்தை-மகன் இடையே அதிகரிக்கும் விரிசல்: 17-ந்தேதி கூடுகிறது பாமக சிறப்பு பொதுக்குழு - ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம் அருகே பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
திண்டிவனம்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடை பயணம்' என்று பெயரில் கடந்த 25-ந்தேதி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.
இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்கக்கூடாது என்ற போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டாக்டர் ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது, அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பாக்கியது.
இந்த சூழலில் பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும். இதில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.