எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பாமகவில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர்.;

Update:2025-08-02 13:45 IST

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.

இதற்கிடையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார்.

அதன் பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி (ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது; சட்ட விரோதம்.

பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோர முடியாது. பாமக நான் உருவாக்கி கட்சி; நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம். பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்