நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

கவின்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-08-02 18:38 IST

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வந்தபோது, அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 26) படித்துள்ளார். அப்போது, கவின்குமாருக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த கவின்குமார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவின் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கவின்குமார் வந்திருந்தார். இதனை அறிந்து அங்கு சென்ற சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவினை தனியாக அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடினார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை கடந்த 30-ந்தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த 28-ந்தேதி கைது செய்யப்பட்ட சுர்ஜித், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், போலீசார் சுர்ஜித்தை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்