பாஜக சார்பில் நதிகள், நீர்நிலைகளை காக்கும் பிரசாரம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும் ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவையான நீர்வளங்கள் தமிழகத்தில் இன்று நிலைகுலைந்து கிடக்கின்றன. பழம்பெருமை வாய்ந்த நமது ஆறுகள் தற்போது கழிவுநீரால் சூழப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது வருங்கால தலைமுறையினருக்கு ஆறு, ஏரி, குளம் ஆகியவை எல்லாம் காணக் கிடைக்காத அதிசயப் பொருளாகிவிடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும் ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
எனவே, நீர்வளம் காப்போம் என்ற பெயரில் கேட்பாரற்று கிடக்கும் நமது நதிகள் மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் பிரசாரத்தை முன்னெடுக்கவிருக்கிறது நமது தமிழக பாஜக. அதன்படி, நாளை ஆடிப்பெருக்கு திருநாளன்று நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலையில் ஈரோடு சங்கமேஸ்வரர் முக்கூடலில் ஆரத்தி எடுத்து இப்பிரச்சாரத்தைத் தொடக்கி வைப்பதோடு, மாலையில் திருநெல்வேலி தாமிரபரணி கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்திலும் ஆரத்தி எடுத்து வழிபட இருக்கிறேன். மற்ற நதிகளிலும் கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் 67 அமைப்பு மாவட்டங்களிலும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள், மரங்கள் நடுவது, மனிதச் சங்கிலி போராட்டம், நீர்நிலைகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் போன்றவையும் பின்வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்றன. மேலும், அழிந்துவரும் நீர்நிலைகளைக் காப்பதற்கான உறுதிமொழியுடன் இந்தப் பிரச்சாரம் முடிவடையவுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள நமது பாஜக சொந்தங்கள் அனைவரும் இந்தப் பிரச்சாரத்தில் ஒருசேரக் கலந்துகொள்வதோடு, பொதுமக்களையும் இதில் பங்குபெறச் செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அன்புக் கட்டளையிடுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.