நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை: கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார்.;
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, கவின்குமார் கடந்த 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, கவின்குமார் கொலை வழக்கு கடந்த 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையில் கவின்குமார் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.