விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
கோப்புப்படம்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த ஜூலை 29-ம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து, குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது.
மன தைரியமிக்க மாரிமுத்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்புவனம் அருகே கோவில் காவலாளி அஜித்குமார் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாரிமுத்து வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.