"காதலனுடன் தான் செல்வேன்"... பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காதல் ஜோடியை தாக்கிய பெற்றோர்

ஆதம்பாக்கம் போலீசார், காதல் ஜோடியை மீட்டனர்.;

Update:2025-08-02 09:26 IST

சென்னை,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், சென்னையில் உள்ள துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரெயிலில் பரங்கிமலை ரெயில் நிலையம் வரும் மகளை அழைத்து செல்ல அவரது தந்தை வந்திருந்தார். ரெயிலில் இருந்து இறங்கிய மாணவி, அவருடன் 25 வயதான வாலிபர் ஒருவரையும் அழைத்து வந்தார்.

பின்னர் ரெயில் நிலையம் அருகே நின்றிருந்த தனது தந்தையிடம் சென்று அந்த வாலிபருக்கு, பணம் தரும்படி கூறினார். அதற்கு தந்தை, "அந்த வாலிபர் யார்?. எதற்காக நான் பணம் தரவேண்டும்" என கேட்டார். அதற்கு மாணவி, "அது எனது காதலன். நீங்கள் பணம் தந்தால் நாங்கள் இருவரும் வெளியூருக்கு சென்று பிழைத்துக்கொள்வோம்" என்றார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, தனது நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், காதல் ஜோடியை விரட்டிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலவேசம் மற்றும் போலீசார், காதல் ஜோடியை மீட்டனர்.

விசாரணையில் கல்லூரி மாணவி வேலை செய்யும் துணிக்கடைக்கு சென்றபோது அந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது. மேலும் அந்த வாலிபர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் கல்லூரி மாணவி, தனது பெற்றோருடன் செல்ல மாட்டேன். காதலனுடன்தான் செல்வேன் என கூறினார்.

ஆனால் திருமணம் ஆகாததால் கல்லூரி மாணவியை பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். வாலிபருக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் உறவினர்களை அழைத்து வந்து பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்வது பற்றி பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்