காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதுடன், அவர்கள் அருவிகளில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்வர். இந்நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த 27-ந் தேதி முதல் தடை விதித்து இருந்தது. கடந்த 29-ந் தேதி அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் கர்நாடக அணைகளில் இருந்து உபரியாக திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.