கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
சமூக நீதி கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கு கல்வி மிகச்சிறந்த ஆயுதம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;
சென்னை,
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
"மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, அரசு நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாம் என எனது செயலாளர் கூறினார். ஆனால், மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும், என் உடலில் எதாவது நோய் இருந்தாலும் அது குணமாகிவிடும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். மருத்துவமனையில் இருந்தபோதும் மக்கள் பணியை தொடர்ந்து செய்தேன்.
முகாமுக்கு வருவோரை கனிவோடும் பரிவோடும் மருத்துவ பணியாளர்கள் நடத்த வேண்டும். நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐநா சபையே பாராட்டியுள்ளது. நகர்புற மருத்துவ சேவை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கல்வியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள். கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் நிதி உதவி அளித்து மக்களை காக்கும் அரசாக இருந்தோம். உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. சமூக நீதி கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கு கல்வி மிகச்சிறந்த ஆயுதம். சுவர் இருந்தால்தான் சித்திரம்.. உடல் நன்றாக இருந்தால்தான் சாதிக்க முடியும். மகிழ்ச்சியாக வாழ உடல் நலமாக இருக்க வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.