உடுமலை பழங்குடியினத்தவர் படுகொலையை மறைக்க வனத்துறை முயல்கிறது - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.;
சென்னை,
உடுமலையில் பழங்குடியினத்தவர் படுகொலையை மறைக்க முயலும் வனத்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னாறு கிராமம் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, வனச்சரக அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்த காவல் மரணத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
விவசாயம் நிலம் தொடர்பாக வனத்துறையினருடனான பிரச்சினையில், பொய்யாக புனையப்பட்ட வழக்கில் ஜூலை 29, 2025 அன்று உடுமலை நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட மாரிமுத்து, மறுநாள் ஜூலை 30 அன்று நீதிமன்ற நடைமுறைகளுக்காக உடுமலைக்கு வந்து திரும்பும்போது, சின்னாறு வனச்சோதனைச் சாவடியில் அரசுப் பேருந்திலிருந்து வனத்துறையினரால் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல், வனச்சரக அலுவலகத்தில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலில் காணப்பட்ட பலத்த காயங்கள் இந்தக் கொடுமையை உறுதிப்படுத்துகின்றன.
விவசாய நிலம் தொடர்பான முரண்பாடுகளால், மாரிமுத்து மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பின்னரும் அவரை இலக்காக்கி, "சிறுத்தைப் பற்கள் கடத்தல், தற்கொலை" என வனத்துறை பரப்பும் பொய்க் கதைகள் நம்பகத்தன்மையற்றவை. இந்தப் படுகொலையை மறைக்க முயலும் வனத்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த படுகொலைக்கு காரணமான வனச்சரகர் உள்ளிட்ட வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வழக்கை நேர்மையான முறையில் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத காவல் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.