ஸ்டாலினின் பெயரையும் புகழையும் எதனாலும் மறைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமிக்கு அருண் நேரு எம்.பி. பதிலடி
திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக கூறுவது வெட்கக் கேடானது என்று அருண் நேரு எம்.பி. கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு முதல்-அமைச்சரின் பெயரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்த விளம்பரத்தில், முன்னாள் முதல்வர் கலைஞரின் புகைப்படம், திமுக சின்னம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதிமுக தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் படி பதவியில் உள்ள முதலமைச்சரின் படங்களை பயன்படுத்தலாம். அதேநேரத்தில் கட்சியின் கொள்கை தலைவர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் படங்களை பயன்படுத்த கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அருண் நேரு எம்.பி. எக்ஸ் தள பதிவில்,
அண்மையில் 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலன் காக்கும் ஸ்டாலின்' ஆகிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது மக்கள் மத்தியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குப் பெருகும் ஆதரவு அலையைக் கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையே காட்டுகின்றது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அரசியல் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்ல. தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். அவர்களின் பெயர்களையும் படங்களையும் மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது அரசியல் மரபையும் - தலைமைப் பண்பையும் போற்றுதல் ஆகும்.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலம் தொடங்கி இப்போது வரையிலும் பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – எம்ஜிஆர் – ஜெயலலிதா பெயர்களும் படங்களும் பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில்கூட அம்மையார் ஜெயலலிதாவின் பெயரும், படமும் பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது தங்கள் அரசியல் சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டு அரசியல் மரபை மறுதலிக்கும் - மறுக்கும் வகையில் திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக கூறுவது வெட்கக் கேடானது.
சூரியனைப் போன்று ஒளி வீசும் நம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பெயரையும் புகழையும் எதனாலும் மறைக்க முடியாது என்பதைப் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் உணர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.