கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெற கட்டணம் என்பது புதிதாக விதிக்கப்பட்டதா? - அரசு விளக்கம்
தொழில் உரிமம் பெறுவது மற்றும் அதற்கான கட்டண விதிக்கும் நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாக பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி பகுதியில் செயல்படும் டீக்கடைக்கு கூட இனி தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும், அதற்காக கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறவேண்டும் என்பது 1958-ல் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் பிரிவு 159-ன் படி, 'அபாயகரமானதும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வர்த்தக உரிமம்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்ட அரசிதழ்படி, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தொழில் உரிமக் கட்டணம் விதிப்பு அறிவிக்கப்பட்டது.
இதில், ஏற்கனவே இருந்த ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்கப்படவேண்டும் என்பது மாற்றப்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது, ஆன்லைனில் உரிமம் பெறுவது உள்ளிட்ட நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு 9.7.2025 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழில் உரிமம் பெறுவது மற்றும் அதற்கான கட்டண விதிக்கும் நடைமுறையை புதிதாக கொண்டு வந்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.