தமிழக காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
தகராறை தட்டி கேட்ட இரு சகோதரர்களை கஞ்சா போதைக் கும்பல் கொலை செய்து கால்வாயில் புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தூத்துக்குடி நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட பார்வை மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இரு சகோதரர்களை கஞ்சா போதைக் கும்பல் கொலை செய்து கால்வாயில் புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பதற்கும், தமிழகத்தில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கும் இதை விட கொடூரமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
தூத்துக்குடி தெர்மல் நகரையடுத்த பண்டுக்கரையைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது வீட்டின் கதவை கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவில் கஞ்சா போதை கும்பல் தட்டி தகராறு செய்துள்ளது. அவர்களை சின்னத்துரையின் புதல்வரும் பார்வை மாற்றுத்திறனாளியான மாரிப்பாண்டியும், அவரது சகோதர் அருள்ராஜும் கண்டித்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் காலை முதல் அவர்களைக் காணவில்லை. இந்த நிலையில்தான் அவர்கள் இருவரின் உடல்களும் அருகில் உள்ள கால்வாயில் புதைந்த நிலையில் கிடந்தது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைக் கும்பல்தான் அவர்களை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையையும் தடுக்க முடியவில்லை; கஞ்சா போதையில் படுகொலை செய்பவர்களையும் தமிழக காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் என்ன பணி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் கஞ்சா வணிகர்களில் தொடங்கி கொலை உள்ளிட்ட பல வகையான குற்றங்களைச் செய்பவர்களுக்கும் ஆளுங்கட்சியில் செல்வாக்கு படைத்த யாரோ ஒருவரின் ஆதரவு இருக்கிறது. அதனால்தான் அவர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் குற்றங்களைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. காவல்துறையை நிர்வகித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் நிகழும் சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு மீறல்கள் ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தமிழகத்தில் அரசும், காவல்துறையும் உள்ளனவா? என்று அவர்கள் வினா எழுப்புகிறார்கள். காவல்துறையையும், சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைத்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.