தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது: மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பணம் மோசடி- ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது

சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-31 07:12 IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி அந்த மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூபாய் இரண்டு கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அந்த மூதாட்டியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மேற்சொன்ன சிபிஐ அதிகாரிகளாக பேசிய நபர்கள் மனிதகடத்தல் வழக்கில் மூதாட்டியை கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த மூதாட்டி ரூ.50 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த மூதாட்டி இதுகுறித்து NCRP-ல் (National Cybercrime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் மேற்சொன்ன வங்கி கணக்கு மற்றும் வங்கி கணக்குடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்களை ஆராய்ந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஆந்திரபிரதேசம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளிராமு மகன் பள்ளிபரமேஸ்வரராவ் (வயது 28), ஆந்திரபிரதேசம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர்களான சங்கர்ராவ் மகன் சுகந்திபதிசந்திரசேகர்(40) மற்றும் ஜெகன்மோகன்ராவ் மகன் ஆடும்சுமில்லி சிவராம்பிரசாத்(43) ஆகியோர் என்பதும்; மேற்சொன்ன வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்ததும், அவர்கள் அந்த மூதாட்டியிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளான பள்ளிபரமேஸ்வரராவ், சகந்திபதி சந்திரசேகர் மற்றும் ஆடும்சுமில்லி சிவராம்பிரசாத் ஆகியோரை ஆந்திரபிரதேசம் சென்று கைது செய்து நேற்று முன்தினம் (29.07.2025) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் மேற்சொன்ன மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 6 செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை டிஜிட்டல் கைது (Digital Arrest) என்ற பெயரில் அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிடவும். மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்