மியான்மரில் ராணுவ அவசர நிலை நீக்கம்.. 6 மாதங்களுக்குள் தேர்தல்

போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.;

Update:2025-08-01 02:20 IST

நேபிடாவ்,

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி 2021-ம் ஆண்டு அரசாங்கத்தைக் கலைத்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆங்காங்கே மோதல்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் ராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹ்லைங் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டுகளாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என அவர் பேசினார்.

இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு, அதிகாரிகளுக்கு அதுதொடர்பான பயிற்சி போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தேர்தல் தொடர்பான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் ஒன்றையும் அரசாங்கம் இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்