தீபாவளிக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி மறுப்பு - அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் ஆதங்க பதிவு

இந்தியர்களை அவர்களின் பண்டிகைகளின்போது அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக அந்த பெண் பதிவிட்டுள்ளார்.;

Update:2025-08-01 15:58 IST

வாஷிங்டன்,

மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் லட்சங்களில் சம்பளத்தை பெறுகிறார்கள், ஆடம்பரமான மேற்கத்திய கலாசார வாழ்க்கை முறையை அனுபவித்து வாழ்கிறார்கள் என்றும் பொதுவாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இதுபோன்ற சலுகைகளை ஒருபுறம் அனுபவித்தாலும், மறுபுறம் அதற்கான விலையையும் அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை பலர் அறிவதில்லை.

அதிலும் குறிப்பாக பெருநிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதால், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக போராட வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விடுமுறை கொண்டாட்டங்களை தியாகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு, சிலர் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திய பெண் ஒருவர், தனது அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் பணிபுரிந்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில், குறிப்பிட்ட சில நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்த பிறகு, மற்ற நாட்கள் நான் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சலுகை உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு எனது சொந்த ஊருக்கு சென்று, வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக நீண்ட நாட்களாக அலுவலகத்தில் இருந்தே பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில், எனது மேலதிகாரியிடம் எனக்கு தீபாவளி சமயத்தில் 'ஒர்க் பிரம் ஹோம்' வாய்ப்பு வேண்டும் என்று கேட்டபோது, அவர் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். அலுவலகத்தில் இருந்துதான் பணிபுரிய வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இவர்களை பொறுத்தவரை நாம் மலிவான கூலிக்கு வேலை செய்பவர்களாக மட்டுமே தெரிகிறோம். எங்களையும் மனிதர்களாக மதித்து நடத்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்படும் என்று நம்புகிறேன்" என ஆதங்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதலங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இதே போன்ற சூழல்களை எதிர்கொண்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அந்த பெண் தனது பதிவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ், வசந்தகால விடுமுறை உள்ளிட்ட சமயங்களில் நீண்ட விடுமுறைகள் வழங்கப்படுவதாகவும், இந்தியர்களை அவர்களின் பண்டிகைகளின்போது அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதே சமயம், தன்னுடன் பணியாற்றும் மற்றொரு நபர், அவரது விடுமுறையை ரத்து செய்துவிட்டதால், தனக்கு தற்போது 'ஒர்க் பிரம் ஹோம்' வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ள அப்பெண், "பிரச்சினை தீர்க்கப்படவில்லை, அதற்கு பதிலாக ஒருவர் தனது வாய்ப்பை தியாகம் செய்துவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்