ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.;
அபுதாபி,
டெல்லியை சேர்ந்தவர் உதித்குல்லார். இந்த நபர் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர். கடந்த ஆண்டு டெல்லி போலீசாரின் விசாரணையில் உதித்குல்லார் ஒரு பெரிய வணிக குழுவுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. குறிப்பாக சச்சின்மிட்டல், விஷால்ஓபராய், ஹிமான்ஷூ, ரஸ்கோத்ரா, ஷோபித்அகர்வால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் அடங்குவர். டெல்லியில் இவரது 4.5 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பாக வங்கிகள் அளித்த புகாரில், இவர் மீது கடந்த ஆண்டு டெல்லி போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
குற்றப்பத்திரிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றம் உதித்குல்லார் மீது கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. அதன் பிறகு இவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்பது தெரியவந்ததும் வழக்கு சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு சி.பி.ஐ. சார்பில் இண்டர்போல் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு சர்வதேச அளவில் சிவப்பு நோட்டீசு அளிக்கப்பட்டு உதித்குல்லார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதில் அவர் அமீரகத்தில் தலைமறைவாக உள்ளதாக தகவல் கிடைத்தது.
இண்டர்போல் தகவலை பெற்றுக்கொண்ட அமீரக பாதுகாப்புத்துறை உள்ளூரில் இந்த நபர் உள்ளாரா? என அனைத்து போலீசாருக்கும் தகவலை அனுப்பி தேடுவதற்கு உத்தரவிட்டது. இதில் அபுதாபியில் தேசிய குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் (என்.சி.பி) இந்திய சி.பி.ஐ. அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து அமீரகத்தில் தலைமறைவாக உதித்குல்லார் இருந்ததை உறுதி செய்தனர். பிறகு இண்டர்போல் அதிகாரிகளின் ஒத்துழைப்பில் அபுதாபி போலீசார் உதித்குல்லாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவை அடுத்து உதித்குல்லாரை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக டெல்லி போலீஸ் அதிகாரிகள் அமீரகம் வந்தனர். பிறகு அபுதாபி போலீசார் உதித்குல்லாரை டெல்லி போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சட்ட நடைமுறைகளுக்கு பிறகு நேற்று அமீரகத்தில் இருந்து உதித்குல்லாரை டெல்லி போலீசார் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு உதவிய அமீரக போலீசாருக்கு டெல்லி போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.