10 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் மு.க.ஸ்டாலின்: 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.;
கோப்புப்படம்
சென்னை,
அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வருகிறார். காலை 10.15 மணியளவில் முதல்-அமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, 2025-26 ஆம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், Miranda House, University of Delhi போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகிறார்.
காவல் துறை சார்பில் 27 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13.54 கோடி ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 60 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணையினையும் வழங்குகிறார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட "தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025"-யினை வெளியிடுகிறார்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 27 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய 2 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, கார்களின் முதல் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி மாலை சென்னையில் இருந்து அவர் விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு செல்கிறார்.