ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரே நாளில் 2 முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.;

Update:2025-07-31 20:21 IST

இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி செய்தபோது, அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பின்னர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்று, மீண்டும் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "அரசியல் நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்று தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்