ரூ.24.78 லட்சத்தில் சட்டத்துறை மின்நூலகம் - அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்
8 கல்லூரி நூலகர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.;
சென்னை,
சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டத்துறை நூலகத்தில் தகவல் தேடல் மற்றும் குறிப்பு ஆதாரங்கள் அணுகுதலை எளிமையாக்குவதற்காக ரூ.24.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்நூலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"2025–2026 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(31.07.2025) தலைமை செயலகத்திலுள்ள சட்டத்துறை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.24.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்நூலகத்தை துவக்கி வைத்தார்.
இதன் மூலம் சட்டத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களை கண்டறியவும், மற்றும் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு தேவையான குறிப்பு ஆதாரங்களை தேடுவதற்கு உதவுகிறது. முதல்-அமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே, அரசு சட்டக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கல்லூரி நூலகர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக் கல்வி இயக்குநர் முனைவர்.ஜெ.விஜயலட்சுமி மற்றும் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.