எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை - அமைச்சர் ஐ. பெரியசாமி

கல்வி உதவித் தொகையை கொடுக்காமல் நிறுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.;

Update:2025-07-31 20:08 IST

கோப்புப்படம் 

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் மத்திய அரசை கண்டிக்கப் போவதில்லை. தேர்தல் வரவுள்ளதால் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டபூர்வமாக நமக்கு வரக்கூடிய கல்வி உதவித் தொகை வரவேண்டும். கல்வி உதவித் தொகையை கொடுக்காமல் நிறுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்த அதிகாரமும் இல்லை" என்று கூறினார்

பின்னர் கிராமத்தில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை அனைத்திற்கும் லைசன்ஸ் வாங்க வேண்டும் என தி.மு.க. அரசு கூறுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தி.மு.க. அரசு லைசன்ஸ் வாங்க வேண்டும் என கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை. அதனால் அவருக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை. 1958-க்கு முன்வரை சாதாரண டீக்கடைகளுக்கு லைசன்ஸ் கிடையாது. 1958-க்கு பின்பு இந்த சட்டம் உள்ளது.

அதன் பின்பு 1994-ல் இந்த சட்டம் திருத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் பஞ்சாயத்து யூனியனில் வசூல் செய்து கொண்டுதான் இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பஞ்சாயத்து யூனியன் சட்டம் பற்றி தெரியவில்லை.

1958-ல் பஞ்சாயத்து யூனியன் சட்டத்தில் டீக்கடை அனுமதியில் ஆபத்து மற்றும் குற்றம் என்று இருந்தது. முன்பு டீக்கடையில் பாய்லர் வைத்திருந்தால் அது வெடித்து இறப்பதற்கான வாய்ப்பு இருந்தது என்பதால் ஆபத்து மற்றும் குற்றம் என்று வைத்திருந்தனர். நான் அமைச்சரான பின்பு அபாயம், குற்றம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு வியாபாரம் என மாற்றப்பட்டது.

3,45,000 நபர்கள் 1958-ல் இருந்து லைசன்ஸ் வாங்கி பணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டிற்கு 24 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. அவர் ஆட்சி காலத்திலும் இருந்தது. புதிதாக நாங்கள் எந்த வரியும் போடவில்லை. வியாபார உரிமம் என டீக்கடைக்கு ரூ.250 கட்டினால் மூன்று வருடத்திற்கு அதனை வைத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்