ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்த சோகம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update:2025-07-31 03:35 IST

திருப்பத்தூர்,

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி (வயது 30), சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார். அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர்.

குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்து நின்றவுடன் சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டது.

அப்போது ரோகிணி கழிவறைக்கு சென்றார். கழிவறைக்கு வெளியே உள்ள வாஷ்பேஷினில் முகத்தை கழுவிக்கொண்டிருந்த அவர் வெகுநேரம் ஆகியும் இருக்கைக்கு திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் வராததால் ராஜேஷ் அவரை தேடிச்சென்றார். அருகில் உள்ள இருக்கைகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதற்குள் ரெயில் காட்பாடியை நெருங்கிவிட்டது. சந்தேகம் அடைந்த ராஜேஷ் உடனே காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காட்பாடி, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரோகிணியை தேடினர். இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்த பெண்அணிந்த உடை மற்றும் அடையாளங்களை வைத்து விசாரித்தனர். அதில் பிணமாக கிடந்த பெண் ரோகிணி என்பதும் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் தவறி விழுந்த தண்டவாளத்தில் இருந்து எதிர்திசையில் ரெயில்கள் வரும் தண்டவாளத்தில் ரோகிணி இறந்து கிடந்தார்.

அந்த பகுதியில் விசாரித்தபோது ரெயிலில் இருந்து விழுந்த ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் எழுந்த மறு பகுதிக்கு சிரமப்பட்டு நடந்து வந்ததாகவும் அதன்பின் முடியாமல் அங்கேயே விழுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ரெயிலில் இருந்து தவறி விழுந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என கருதி நடந்து சென்றதும் காப்பாற்ற யாரும் வராததால் இறந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்