அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்

5 போலீஸ்காரர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-31 04:12 IST


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளியாக அஜித்குமார் பணியாற்றி வந்தார். கோவிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர், நகை மாயமானதாக கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மானாமதுரை துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்த அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் கைதான 5 போலீசாரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதனால் அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செல்வ பாண்டி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கான நீதிமன்ற காவலை வருகிற 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

5 போலீஸ்காரர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாகவும், இது தொடர்பான மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் எனவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்