கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கேரள பா.ஜனதா எதிர்ப்பு
கேரள மாநில பா.ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகரும், கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய 2 கன்னியாஸ்திரிகள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் கடந்த 25-ந் தேதி சத்தீஷ்கார் மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். மத மாற்றத்துக்காக 3 இளம்பெண்களை கடத்தியதாக அந்த மாநில போலீசார், ஆள் கடத்தல், மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி முதல்-மந்திரி பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பினார். ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகரும், கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கைதான கன்னியாஸ்திரிகள் மத மாற்றம், ஆள் கடத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. கன்னியாஸ்திரிகளை விடுவிக்க சத்தீஷ்கார் அரசை நாடியுள்ளோம்.
சம்பவம் நடந்த உடன் நாங்கள், சத்தீஷ்கார் அரசை தொடர்பு கொண்டோம். கன்னியாஸ்திரிகள், 3 இளம் பெண்களையும், ஏழ்மையில் வாழும் அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் தான் அழைத்து வர சென்றுள்ளனர். இதில் ஆள் கடத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் சத்தீஷ்கார் அரசு கண்னியாஸ்திரிகளுக்கு ஆதரவான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.