ஆசிரியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருமாறு கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் உள்ள ஆசிரியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருமாறு கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குறியது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-07-30 12:00 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

புதிய ஒய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஒய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை நேர்தல் சமயத்தில் தி.மு.க. அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதி இதுநாள் வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மையிலேயே இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆர்வம் தி.மு.க அரசுக்கு இருந்தால் உடனடியாக ஓர் டியாக ஓர் ஆணையை பிறப்பித்து நடைமுறைப்படுத்தலாம்.

இதனைச் செயல்படுத்தும் எண்ணம் தி.மு.க. அரசுக்கு இல்லை. எனவேதான், ஒரு குழுவை அமைத்து காலந்தாழ்த்தும் செயலில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக, ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற கடிதம் அளிக்குமாறு தி.மு.க. அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

பொதுவாக, பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) செலுத்துபவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வருபவர்கள். பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (Contributory Provident Fund) செலுத்துபவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வருபவர்கள். ஏனென்றால், பொது வருங்கால வைப்பு நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பை மட்டும் செலுத்துவார்கள். அரசாங்கம் எவ்வித பங்களிப்பையும் அளிக்காது ஆனால், பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அரசாங்கமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

இதன்படி, பொது வருங்கால வைப்பு நிதியில், அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். இந்தப் பயனை அவர்கள் கடத்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். அரசாங்கத்தின் சார்பில் எவ்வித பங்கும் அவர்களுக்காக செலுத்தப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில் ஆசிரியர்களின் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்களிப்பு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் மாற்றம் செய்ய கடிதம் கொடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சலுகையை பறிப்பது என்பது இயற்கை நியதிக்கு முரணான செயல், இதன்மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக தி.மு.க. அரசு ஒரு குழுவை அமைத்திருப்பது ஒரு நாடகமே என்பது தெள்ளத் தெளிவாகிறது.

முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினரை அழைத்துப் பேசி, ஏற்கெனவே அவர்கள் பெற்று வந்த சலுகையை தொடர்ந்து அனுபவிக்கவும், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்