தமிழ்நாட்டில் 1967,1977 போன்று 2026 தேர்தலில் மாற்றம் வரும் - விஜய் பரபரப்பு பேச்சு
இனி மக்களுடன்தான் எனது பயணம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளர்.;
சென்னை,
`My TVK' )மை டிவிகே) செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் விஜய். செயலியில் ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 5 பேரை சேர்க்கலாம். பொதுமக்களை தவெக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு எந்த ஒரு ஒடிபி-யும் கேட்கபடாது என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீட்டு விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது:-
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967, 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அது போல, 2026 தேர்தலும் அமையும். 1967,1977, ஆகிய ஆண்டு தேர்தல்கள் திருப்புமுனையாக அமைந்தன. 2026 தேர்தலில் மாற்றம் வரும்.
மக்களுடன் செல், மக்களுடன் வாழ் என அண்ணா கூறியதை சரியாக செய்தாலே போதும். அண்ணா வழியில் செல்வோம். வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு எல்லோரையும் சந்தித்தவர்களே ஜெயித்தனர். மக்களிடம் செல்வோம், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம்.
நாம் இருக்கிறோம், நம்முடன் மக்கள் இருக்கிறார்கள், இதற்கு மேல் என்ன வேண்டும். அடுத்தது மதுரை தவெக மாநாடு, மக்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடக்கவிருக்கிறது. இதற்கு பின் மக்களோடு மக்களாகதான் நாம் இருக்கப்போகிறோம். அதற்காக திட்டமிடுங்கள்.இனி மக்களுடன் தான் எனது பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.