சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை - மேலும் ஒருவர் கைது

சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.;

Update:2025-07-30 11:00 IST

சென்னை,

சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்தபோது ஸ்கூட்டர் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

கார் மோதியதில் ஸ்கூட்டர் உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பலியான நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

நிதின்சாய் மற்றும் அபிஷேக்கின் நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த கொலைக்கான பயங்கர பின்னணி வருமாறு:-

கொலையான நிதின் சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ் என்பவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரது காதலை ஏற்காமல் கண்டித்து வந்துள்ளார். எனினும் வெங்கடேஷ் விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மாணவி தனது நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர், வெங்கடேசனை நேரில் சென்று மிரட்டி உள்ளார். எனினும் அவரது மிரட்டலை வெங்கடேசன் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெங்கடேசனும் கலந்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து பிரணவ் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் வந்துள்ளார். ஓட்டலை விட்டு வெளியே வந்தவுடன் வெங்கடேசனை பிரணவ் தரப்பினர் தாக்க முயன்றனர். அப்போது நிதின்சாயும், அபிஷேக்கும் அவர்களை தடுத்து நிறுத்தி வெங்கடேசனுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வெங்கடேசனின் கால் மீது பிரணவ் தரப்பினர் காரை ஏற்றி உள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த நிதின் சாய், அபிஷேக் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு காரை சேதப்படுத்தி, நம்பர் பிளேட்டையும் உடைத்து எறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரணவ் தரப்பினர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதன்பின்னர், நிதின்சாயும், அபிஷேக்கும் ஸ்கூட்டரில் ஒன்றாக சென்ற போதுதான் பிரணவ் தரப்பினர் காரில் பின்தொடர்ந்து வந்து வேகமாக மோதி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு போலீசார் வசம் வந்தது. கொலை வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரில் வந்தவர்கள், விபத்தில் நிதின்சாய் இறந்தது தெரியாமல் சிரித்தபடி எச்சரிக்கை விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டி வந்து நிதின்சாய் மீது மோதி கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் பேரன் சந்துரு என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நிதின்சாயின் உறவினர்கள், நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் தீபக் ஆகியோர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன்படி பிரணவ்,சுதன் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துரு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தநிலையில், சந்தூரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

நித்தின் மற்றும் அவரது நண்பர்கள் கல்லை எடுத்து எங்களை தாக்க முயன்றனர்.கல்லால் தாக்க வந்ததால், அதிவேகமாக காரை எடுத்தபோது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சந்துரு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரரான தனசேகரன், தனது பேரனான சந்துருவை நேற்றிரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்த பின் அவரிடம் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். காரை ஏற்றி கல்லூரி மாணவர் நித்தின் சாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்துரு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பிரமுகரின் பேரன் சந்துரு உள்ளிட்ட 4பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் காரை ஓட்டிய இளைஞர் ஆரோன் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இளைஞர் கொலைக்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வளசரவாக்கம் பகுதியில் சிக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்