மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு.. கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் பேசினார். அவர் பிரதமர் மோடி குறித்து சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
அவர் பேசி முடித்தவுடன் எழுந்த அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதாக ஆவேசமாக தெரிவித்தார். உணர்ச்சி வேகத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவரது வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஜே.பி.நட்டா பேசிய பிறகு எழுந்த கார்கே, ஜே.பி.நட்டா தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டது வருத்தமளிப்பதாகக் கூறினார். தற்போதுள்ள பாஜக அரசில் தான் மதிக்கும் ஒரு சில அமைச்சர்களில் நட்டாவும் ஒருவர் என்றும், அவரே இப்படிப் பேசியது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார். நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க் களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கேட்குமாறு கோரினர். பின்னர், ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "என் வார்த்தைகளை ஏற்கனவே திரும்ப பெற்று விட்டேன். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பிரபலமான தலைவர். அது பா.ஜனதாவுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை. ஆனால் அந்த பெருமையை பற்றி கருதாமல், கார்கே பேசியது ஆட்சேபனைக்குரியது.
இருப்பினும், எனது வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில், கார்கே வரம்பு மீறி பேசியதை நீக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.