25 சதவீதம் வரி: "இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் மோடி பயப்படக்கூடாது.." - ஜெய்ராம் ரமேஷ்
இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.;
புதுடெல்லி,
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்ட அறிக்கையில், "இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விதிப்பை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை போன்று. இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத வரி விதித்ததை "நாட்டிற்கு ஒரு பின்னடைவு" என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இது பிரதமர் மோடிக்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பின்னடைவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 30 முறை ஆபரேஷன் சிந்தூர் தன்னால் தான் நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அப்படியானால் இந்த (இந்தியா-அமெரிக்க) நட்பிலிருந்து நமக்கு என்ன கிடைத்தது? ஆபரேஷன் சிந்தூர் திடீரென ஏன் நிறுத்தப்பட்டது என்று நாடு இன்னும் கேள்வி எழுப்புகிறது.. இது நமது நாட்டிற்கும், நமது பொருளாதாரத்திற்கும், பிரதமருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.
பிரதமர் மோடி பயப்படக்கூடாது. இது அமெரிக்காவின் மிரட்டல். இது நமக்கு ஒரு பிரச்சனையின் காலம். இது நமது பொறியியல், மருந்து மற்றும் வணிகத் தொழில்களைப் பாதிக்கும். இது நமக்கு முன் ஒரு பெரிய சவால். நமக்கு முன் இரண்டு பெரிய சவால்கள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம் - பாகிஸ்தான் மற்றும் சீனா, ஆனால் அமெரிக்கா மூன்றாவது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது"
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.