செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.;
புதுடெல்லி,
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி ஆணைகளை வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தொடர்பாக பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், "செந்தில் பாலாஜி தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்தால் தீர்வு கிடைக்க காலதாமதம் ஏற்படும். இதனால் செந்தில் பாலாஜி மீதான பிரதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தனியாக விசாரிக்க வேண்டும்'' என்றார்.
அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-க்கும் மேற்பட்டதாக உள்ளது. மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனித்தனியாக விசாரிக்கும்போது காலவிரயம் ஏற்படும் .2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும், 500 சாட்சிகளும் உள்ள இந்த வழக்கை விசாரிக்க கோர்ட்டின் ஒரு சிறிய அறை போதுமானதாக இருக்காது, கிரிக்கெட் மைதானம் கூட தேவைப்படும். அரசால் நியமிக்கப்பட்ட வக்கீல் மூலம் வழக்கை எதிர்கொள்ளும்போது நீதியை நிலைநாட்ட முடியாது என்ற பொதுக்கருத்து உள்ளது.
இதனால் முதலில் எத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது? பணம் எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய விவரங்களை வழங்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கை எவ்வாறு நடத்தப்போகிறீர்கள்? என்பது பற்றிய தெளிவான திட்டத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றியும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்டு 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.