ஆந்திர மாநில மதுபான ஊழல் வழக்கு; அட்டைப் பெட்டிகளில் பதுக்கிய ரூ.11 கோடி பறிமுதல்
12 அட்டை பெட்டிகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது;
திருப்பதி,
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் மிகப்பெரிய அளவில் மதுபான ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர். ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களில் வீடு மற்றும் அலுவ லகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருண் புருஷோத்தமன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்.விசாரணையின் போது மதுபான ஊழலில் பெற்ற ரூ.11 கோடியை பண்ணை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் தெலுங்கானா மாநிலம் கங்கா ரெட்டி மாவட்டம் கச்சாராமல் உள்ள சுலோக்சனா பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு 12 அட்டை பெட்டிகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து ரூபாய் நோட்டுகளை எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணிப் பார்த்தனர். மொத்தம் ரூ.11 கோடி இருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபான ஊழல் வழளின் பங்கு குறித்த விவரங்கள் விரைவில் ஆதாரத்துடன் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.