பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு நாளை முதல் அமல்
ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 20 சதவீதம் வரை ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.;
கோப்புப்படம்
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து 899 ஆட்டோக்கள் ஓடுகிறது. தற்போது ஆட்டோ கட்டணமாக முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 அடிப்படை கட்டணமாக உள்ளது. இந்த கட்டணம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள், கட்டணத்தை உயர்த்த கோரி தொடர்ந்து கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி, பெங்களூருவில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 20 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதாவது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு ஆட்டோ டிரைவர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் டிரைவர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை மீட்டர்களை திருத்தாமல் ஆட்டோக்களை இயக்குவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.