என்ஜினீயரிங் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு: 80,650 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை
இந்த ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் அந்த இடங்களை உறுதிசெய்ய நாளை (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.;
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. 3 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 14-ந்தேதி தொடங்கி 26-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 41,807 பேர் அழைக்கப்பட்டதில், அதில் பலர் பங்கேற்றனர். அவர்களில் 28,896 இடங்கள் நிரம்பின.
இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க பொதுப்பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய பிரிவுகளில் 98,575 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்ய 28-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுப் பிரிவில் 70,116 பேருக்கும், 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 10,534 பேருக்கும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் அந்த இடங்களை உறுதிசெய்ய நாளை (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறு உறுதிசெய்பவர்களுக்கு 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரையிலும் கல்லூரியில் சேரவும், வேறு சிறந்த இடங்களுக்கு காத்திருக்கும் வகையில் கல்வி கட்டணத்தை செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டு, 7-ந்தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட உள்ளது.