தமிழ்நாட்டில் பணிபுரியும் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள்: அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பல்வேறு பணிகளில் 11 லட்சத்து 93 ஆயிரத்து 297 பேர் ஈடுபட்டு வருpகன்றனர் என தொழிலாளர் நலத்துறையின் கணக்கு தெரிவிக்கின்றது.;

Update:2025-07-29 18:25 IST

சென்னை,

தொழில் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் படித்தவர்கள் மட்டுமல்லாது படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழில்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

அவ்வாறான வேலைவாய்ப்புகளை தற்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை காட்டிலும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குறிவைத்து இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பலர் மேற்படிப்பு படித்த உடன் அதற்கேற்ற வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.

இதனால் குறைந்த ஊதியம், கைத்தொழில், உடல் உழைப்பு தொழில்கள் செய்ய ஆள் கிடைப்பதில்லை. அதைத்தான் வடமாநில தொழிலாளர்கள் கைப்பற்றி விடுகின்றனர். குறைந்த ஊதியம், கூடுதல் நேர வேலைக்கு அவர்கள் சம்மதிப்பதால் பெரும்பாலான இடங்களில் அவர்களுக்கே முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது.

இதே வேலையை சொந்த மாநிலத்தில் அவர்கள் செய்தால் குறைந்த ஊதியமே கிடைக்கும் என்பதால், அதை முகம் மலர்ந்து ஏற்றுக்கொள்கின்றனர். இங்கு பாதுகாப்பான சூழலும் நிலவுவதால், ஒருமுறை சொந்த ஊர் சென்று திரும்பும்போது, தங்களுடைய உறவினர்கள், நண்பர்களையும் இங்கே வேலைக்காக அழைத்து வந்து விடுகின்றனர்.

முன்பெல்லாம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தான் வடமாநிலத்தவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்போது, எழும்பூர் ரெயில் நிலையத்திலும் அவர்களை அதிகம் காண முடியும். விளைவு... சென்னை முதல் கன்னியாகுமரி வரை குக்கிராமங்களில்கூட வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இவர்களும் இந்தியர்கள் என்ற வகையில், வேலை செய்ய இவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடுவதையும் புறம்தள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ந்தேதி சிறுமி ஒருவரை வடமாநில இளைஞர் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டை நோக்கி வேலை தேடி வரக்கூடிய இத்தகைய தொழிலாளர்களின் விவரங்களை வேலை கொடுக்கும் நிறுவனங்கள் முறையாக பெற்று பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டில் எவ்வளவு வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர் என்ற விவரத்தையும் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் எண்ணிக்கையை பார்க்கும்போதுதான் அதிர்ச்சியாக உள்ளது. சுமார் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். முறையாக பதிவு செய்தவர்கள்தான் இவர்கள். இன்னும் பதிவு செய்யாமல் எத்தனை பேர் தங்கியுள்ளனர் என்ற விவரம் அரசிடம் இல்லை.

தொழிலாளர் நலத்துறையின் கணக்குப்படி, மொத்தம் 11 லட்சத்து 93 ஆயிரத்து 297 பேர் தமிழ்நாட்டில் பல இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதில் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் ஆவார்கள்.

அந்த வகையில், மாநில வாரியாக, தமிழ்நாட்டில் தங்கி இருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம் வருமாறு:-

ஒடிசா- 2,86,500

பீகார்- 2,47,016

ஜார்கண்ட்- 1,90,518

மேற்கு வங்காளம்- 1,84,960

அசாம்- 92,105

உத்தரபிரதேசம்- 89,462

சத்தீஷ்கார்- 24,882

மத்தியபிரதேசம்- 14,440

ஆந்திரா- 13,036

கேரளா- 11,043

ராஜஸ்தான்- 6,414

கர்நாடகா- 6,010

மராட்டியம்- 4,935

திரிபுரா- 3,806

அருணாசலப்பிரதேசம்- 2,073

பஞ்சாப்- 1,946

டெல்லி- 1,896

உத்தரகாண்ட்- 1,803

மேகாலயா- 1,636

குஜராத்- 1,290

மணிப்பூர்- 1,128

நாகாலாந்து- 1,016

இதேபோல், சண்டிகர், தெலுங்கானா, அரியானா, இமாசலப்பிரதேசம், புதுச்சேரி, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 500 முதல் 1,000-க்குட்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், ஜம்மு காஷ்மீர், சிக்கிம், அந்தமான் நிகோபர் தீவு, கோவா, டாமன் டையூ, லடாக், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 20 முதல் 500-க்குட்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிகிறார்கள்.

இந்த விவரம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பதிவுசெய்யாமல் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற விவரம் தெரியாததால், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்