விஷம் குடித்து உயிருக்கு போராடிய பெண்.. தாலியை பறித்து மது குடிக்கச்சென்ற கொடூர கணவர்

மது குடிப்பதற்காக இளம்பெண் அணிந்திருந்த அரை பவுன் தங்கத்தாலியை அவரது கணவர் கேட்டு தகராறு செய்துள்ளார்.;

Update:2025-07-30 05:43 IST


மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்திநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பரிமளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விக்கேஷ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் மது குடிப்பதற்காக பரிமளா அணிந்திருந்த அரை பவுன் தங்கத்தாலியை கேட்டு தகராறு செய்துள்ளார்.

தாலியை தர மறுத்த பரிமளத்தை விக்னேஷ் தாக்கி விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் இருந்த பரிமளா மனவேதனை அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

அப்போது வீட்டிற்கு வந்த விக்னேஷ் பரிமளாவின் கழுத்தில் கிடந்த தங்க தாலியை பறித்து மது குடிக்கச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை கண்விழித்து அழுதது. நீண்ட நேரம் குழந்தையின் அழுகுரல் கேட்டதால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தபோது பரிமளா மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்