ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் கடந்த 27ந் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார்.
சுர்ஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அக்காளை கவின்குமார் காதலித்ததாகவும், காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கவின்குமார் காதலித்த இளம்பெண் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் (எஸ்.ஐ.) சரவணன், கிருஷ்ணகுமாரியின் மகள் என்பது தெரியவந்தது. போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித் தனது அக்காளை காதலித்த கவின்குமாரை கொலை செய்துள்ளார்.
இந்த சூழலில் கமல்ஹாசன் எம்.பி, இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்த படுகொலை தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி - சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், 27.07.2025 அன்று ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று கவின் தனது தாயோடு தாத்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மேற்படி மருத்துவமனையில்தான் அவரது காதலியான சுபாஷினியும் பணிசெய்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுபாஷினியின் பெற்றோர்களான தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி இருவரும் காவல்துறையில் பணியாற்றிவருகிறார்கள். இருவரும் கவின் - சுபாஷினி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்புக்கிடையே இவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த 27.07.2025 அன்று பட்டப் பகலில் சுபாஷினி வீட்டு அருகில் வைத்து சுபாஷினியின் உடன்பிறந்த சகோதரன் சுர்ஜித் கொடூரமான முறையில் கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
முதற்கட்டமாக இப்படுகொலையில் சுர்ஜித் மட்டுமே குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். மேற்படி இப்படுகொலையில் அவனது பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து, அவர்களையும் குற்றவாளியாகச் சேர்க்கச் சொல்லி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னால் வந்த அழுத்தத்தால் சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் தற்போது சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியைப் பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது. சட்டம் ஒழுங்கு பல நிலைகளில் சீர் கேட்டு போயிருக்கும் சூழலில், இந்த ஆணவக்கொலைக்கு காரணமான சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, இந்த வழக்கு எப்படி கையாளப்படும் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மிக வெளிப்படையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன என்கிற நிதர்சனத்தை ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, அரசு வேலை என்பதோடு முடித்துக்கொள்ளாமல், சாதிப் பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கூடுதல் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி (Atrocity Prone Areas) வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்த கணமே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படை சட்ட விதிகளைக் கூட காவல்துறை பின்பற்றுவதில்லை. இதைத்தான் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி இருந்தது.
சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு முறை நிகழும்போதும், சம்பவம் நடந்த கணமே ஊடகத்தில் மாற்றுக் கதையாடல்களை உலவ விடும் போக்கை, காவல்துறையினர் கைவிட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டுப் பட்டியலினச் சமூக மக்களின் சமூக உரிமை மற்றும் மாண்பை மதித்து, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பட்டியலின மக்களோடு துணை நிற்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்புணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.
பள்ளியில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதிபதி சந்துரு தலைமையில் அமைத்த குழுவைப் போல, ஆணவக்கொலைகளைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி, தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவேண்டும். ஆணவக்கொலைகளைப் போர்க்கால அடிப்படையில் அணுகி, கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய குற்றங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கான எல்லா சமூக காரணிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்ட கோரிக்கையைத் புறக்கணித்து வரும் திமுகஅரசையும் அதன் கூட்டணிக்கட்சிகளையும் கண்டிக்கின்றோம்!"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.