காதல் விவகாரம்: பஞ்சாயத்துக்கு சென்ற கல்லூரி மாணவர்.. அடுத்து நடந்த கொடூரம்
இளம்பெண்ணின் ஆண் நண்பர் பிரணவ் என்பவர் வெங்கடேசனை போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது.;
சென்னை,
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் நிதின்சாய் வயது 21. இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் நிதின்சாய் தனது நண்பரான அபிஷேக் என்பவருடன் திருமங்கலம் பள்ளி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று அபிஷேக் ஓட்டி சென்ற பைக் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நிதின்சாய் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நிதின் சாயின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிதின்சாய் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் அது திட்டமிட்ட படுகொலை என்றும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரான நிதின் சாய் காரை ஏற்றி திட்டமிட்டப்படி கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிதின் சாயின் நண்பரான வெங்கடேசன் என்பவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அதில் இளம்பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி இளம்பெண் தனது ஆண் நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பிரணவ், வெங்கடேசனை போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சளுக்கு ஆளான வெங்கடேசன் நேற்று இரவு அண்ணாநகரில் வைத்து பார்த்தபோது அதுபற்றி நிதின்சாயிடம் கூறி உள்ளார்.
இருவரும் பிரியாணி கடையில் சந்தித்துக்கொண்ட நிலையில்தான் மிரட்டப்படுவது பற்றி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அது தொடர்பாக எதிர் தரப்பை சேர்ந்த பிரணவ் மற்றும் அவரது ஆட்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே திருமங்கலம் பள்ளி சாலைக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகில் வைத்து பிரணவுக்கு ஆதரவாக காரில் வந்தவர்களும் வெங்கடேசனுக்கு ஆதரவாக சென்ற நிதின்சாய் தரப்புக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரில் வந்தவர்கள் வெங்கடேசன் மீது திடீரென காரை ஏற்றி உள்ளனர். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேசனின் நண்பர்கள் கார் கண்ணாடியை உடைத்தும் நம்பர் பிளேட்டையும் பிய்த்தும் காரை அடித்து நொறுக்கி உள்ளனர். இதன் பின்னர் காரில் வந்தவர்கள் அங்கிருந்து காரை எடுத்து சென்றனர்.
இதனால் வெங்கடேசனுக்கு ஆதரவாக பேச சென்ற நிதின்சாயும் அபிஷேக்கும் வீடு திரும்பி உள்ளனர். சிறிது நேரத்தில் வெங்கடேசன் மீது மோதிவிட்ட சென்ற கார் மீண்டும் அங்கு வந்துள்ளது. அப்போது திடீரென காரை ஓட்டி சென்ற வாலிபர் அபிஷேக் மற்றும் நிதின்சாய் ஓட்டி சென்ற பைக் மீது பயங்கரமாக மோதினார். இதில்தான் தூக்கிவீசப்பட்டு நிதின்சாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடமிருந்து இந்த வழக்கு விசாரணை சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கல்லூரி மாணவரான நிதின்சாயை காரை ஏற்றிக்கொலை செய்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் உறவினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காதல் விவகாரம் தொடர்பாக அந்த நபர் காரில் வந்து பஞ்சாயத்து பேசியபோதுதான் மோதல் ஏற்பட்டதாக உயிரிழந்த நிதின்சாயின் நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் சந்துரு என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரத்தில் அரங்கேறி உள்ள இந்த கொலை சம்பவம் திருமங்கலம் மற்றும் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.