சாதியத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் - இயக்குநர் மாரி செல்வராஜ்
நெல்லை கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.;
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் கவின் செல்வகணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கவின் தூத்துக்குடி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பாளை கே.டி.சி. நகரை சேர்ந்த சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கவின் பழகுவது அந்த பெண்ணின் சகோதரரான பட்டதாரி வாலிபர் சுர்ஜித்(24) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பலமுறை கவின் செல்வகணேசிடம் எச்சரித்த நிலையில் அவர் கேட்கவில்லை என்பதால் நேற்று முன்தினம் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து சுர்ஜித், கவினை வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தார். இந்த கொலை சம்பவத்தில் அவரது தாய்-தந்தையரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்கவும் கவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து அவரது உடலை வாங்க மறுத்து முக்காணி ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் தாய்-தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தள பதிவில், "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்... சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்" என்று தமிழக அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.